Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Thursday, 16 May 2013

உலகம் முதல் பிரம்மம் வரை


நாம்  கண்ணால்  காண்கிறோம்.  கண்  என்பது  புலன்.  இது புலன்களில்  ஒன்று.  ஐம்புலன்களும்  அகந்தையால் ஏற்படுத்தப்பட்டவை.   புலன்கள்   அகந்தையின்   கருவிகள்.   தவசி கண்மூடி தியானிக்கும்பொழுது புலன்கள் அவிகின்றன. புலன்கள் குவிந்து,   அவிழ்ந்தால்   மனம்   விழித்துக்   கொள்ளும்.   புலன்கள் அவிந்த  பின்  மனம்  தானே  புலனின்றிச்  செயல்படும்.

கண்  மூடியிருக்கும்பொழுது  பார்க்கும்.
காதை  மூடிக்  கொண்டாலும்  கேட்கும்.
தொடாவிட்டாலும்  தொடு  உணர்ச்சியிருக்கும்.
முகராவிட்டாலும்  வாசனை  தெரியும்.
சுவைக்காவிட்டாலும்  ருசி  தெரியும்.

விழிப்படைந்த    மனம்    நிஷ்டையில்    மேலே    போகும். மனத்தினுள்    ஆத்மா   மனோமயப்    புருஷன்        உண்டு. தூய்மையான மனத்தின் ஆத்மா மனத்திலிருந்து விடுதலை பெறும். விடுதலை  பெற்று  உயரும்.  உயரும்  ஆத்மா  பிரம்மத்தை  அறிய அவாவுடையது.   மனம்   பகுதியானது.   பகுக்க   ஏற்பட்ட   கருவி. பிரம்மம் முழுமையானது. முழுமையான பிரம்மத்தைப் பகுதியான மனம்  காண  முடியாது.  பிரம்மத்தின்  ஓர்  அம்சம்,  அல்லது  ஓர் உருவம், ஒரு தோற்றம் மட்டும் தெரியும். அப்படி மனம் பிரம்மத்தைக் காண  முயன்றால்  பிரம்மம்  சச்சிதானந்தமாகத்  தெரியும்.
  • பகுதியான  மனத்தின்  பார்வைக்கு  பிரம்மத்தின் ஓர்  அம்சமாக  சச்சிதானந்தம்  தெரியும்.
  • பிரம்மம்  சச்சிதானந்தமில்லை.
  • சச்சிதானந்தம்  பிரம்மத்தின்  ஒரு  தோற்றம்.
  • சத்து,   சித்து,   ஆனந்தம்   என்ற   மூன்று   அம்சங்களுள்ள சச்சிதானந்தத்தின் ஒரு பகுதியே மனத்தின் பார்வைக்குத் தெரியும்.
  • அப்படிக்   காணும்   ரிஷிகள்   சத்தைக்   கண்டால்,   அதை சச்சிதானந்தத்தின்   ஓர்   அம்சம்   எனக்   கொள்ளாமல்   சத் என்பதையே   முழு   சச்சிதானந்தம்   என்பர்.   அதேபோல்   சித்தை மட்டும்  காண்பவர்களும்,  ஆனந்தத்தை  மட்டும்  காண்பவர்களும் அவற்றையே  முழு  சச்சிதானந்தம்  என்பர்.  மனம்  இப்படி  மட்டும் செயல்படும் தன்மையுடையது.
  • தவத்தின்  உயர்வுக்கேற்ப  சத்  தன்னை  வெளிப்படுத்தும்.
  • சத்  என்பதை  Self  என்று  ஆங்கிலத்தில்  குறிக்கிறார்.
  • இந்த  Selfக்கு  4  நிலைகள்  உள்ளன.
  • முதல்  நிலை  கடந்த  நிலை  Transcendent Self.
  • அடுத்தது  பரமாத்மா  எனும்  Superconscient Self.
  • அதற்கும் அடுத்தது பிரபஞ்சத்தின் ஆத்மா எனும் Cosmic Self.
  • கடைசியானது  அக்ஷரப்  புருஷன்  எனும்  Immutable Self.
கடந்ததை   Self  எனவும்   பிரபஞ்சத்திற்குரியதை   Soul எனவும்   குறிக்கிறார்.   தவத்தின்   நிலைக்கேற்ப   சத்   புருஷன் தன்னைத்   தவசிக்கு   வெளிப்படுத்துகிறான்.   மனிதனிலுள்ள பிரம்மத்தை  self  எனக்  குறிக்கிறார்.  மனிதனுடைய  selfலிருந்து கடந்த நிலையிலுள்ள  Self வரை எல்லாவற்றையும் தழுவும் சொல் spirit, ஆன்மா  எனப்படும்.

முழுமையான   சச்சிதானந்தத்தின்   அம்சங்கள்   பகுதியான மனத்திற்குப்  பிரிந்து  எதிரெதிரானவையாகத்  தெரிவதற்கும்  நல்ல உதாரணம், ஈஸ்வரன்    இது  சச்சிதானந்தத்தின்  முழுமையான  மூன்று அம்சங்களில்    பிரம்மம்,  புருஷன்,  ஈஸ்வரன்    ஒன்று.  சத்திய ஜீவியத்திலிருந்து    பார்த்தால்    ஈஸ்வரன்    முழுமையாகத் தெரிவான்.   இதற்கு   நிர்குணம்,   சகுணம்   இரண்டும்   உண்டு. தெய்வீக  மனத்திலிருந்து  பார்த்தால்  ஒரு  புறம்  நிர்குணமாகவும், அடுத்த  பக்கம்  சகுணமாகவும்  தோன்றும்.

முதல் மனைவியை நேசியுங்கள்!


ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியதுகவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.


1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.

2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.

4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.

 எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்,

Wednesday, 15 May 2013

உண்மையான ஆன்மீக வாழ்கை


                 ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
 
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
உண்மையான ஆன்மீக வாழ்கை
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
 
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
 
ALL IS NOT GOD, BUT GOD IS ALL
 
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்

ஹந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…

ங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

indian-gods-hindu-gods-collage-shirdi-sai-baba-saibaba-wallpaper 

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?
கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.


Friday, 15 March 2013

ஆன்மிகம் - ஒரு பார்வை

Aanmegam Ulagam
ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.


இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.


இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.


அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.


ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.


இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.


ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.

பிரம்மம் அழிவில்லாதது.




இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.

சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே"

"அதை உடை"

"உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....." 

இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே""

அதை உடை""

உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."