Showing posts with label அனுமன். Show all posts
Showing posts with label அனுமன். Show all posts

Friday, 5 April 2013

ராம நாம மகிமை...

போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!. இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் அரசவை வந்து ராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகம் மூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம் அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான் என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.

வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், இராமரிடம் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டுமென ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற் கொண்ட ராமனும் போருக்கு கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.

இராம பாணத்திற்கு முன்னால் ஏதும் செய்ய இயலாதென கூறிய நாரதர், இந்த உலகில் உன்னை காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு, அவள் உணக்கு அபயமளித்தேன் என சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட என்று கூறினார்.

அவள் அனுமனின் தாயாரான அஞ்சன தேவி...

அஞ்சன தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சன தேவி, தனது மகன் அனுமனை அழைத்து இவனை காப்பாற்று என கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன் தன் வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்த் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.

போருக்கு வந்த ராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ராமன் உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டார்.

ராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது அவர் காலடியில் விழத் துவங்கின....தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.

தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ராமரும் போரை நிறுத்தினார். நாரதல் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரில் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம் இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள் என கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னித்தார்.

அப்போது அங்கு வந்த ராமன், நாரதரிடம் எப்படி என் பாணங்கள் வலுவிழந்தன என கேட்டதற்கு....நாரதர், ராமா!, உன் பாணங்களை விட உன் நாம ஜெபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன் என்றார்..

Friday, 15 March 2013

தத்தாத்ரேயர்

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்"


"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!