ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில்
நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும்,
அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு
செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.
இறைவனையும்,
ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள்
வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள்
இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால்
எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின்
வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான்
முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.
இப்பொழுது
ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே
ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு
முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும்
அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.
இவ்வாறு
ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும்
சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும்
ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி
இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த
ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை
நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.
அறிவியல்
வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும்,
உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப்
போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை
முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள்
வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத்
தெரியாமல் போனது.
ஆன்மிகம் என்பது
வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக்
கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம்
நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.
இறைவனை
வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை.
நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக
நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால்
என்ன என்பதை நினைவு படுத்துவோம்.
ஆன்மிகம்
என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில்
நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும்,
அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு
செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.
No comments:
Post a Comment